வெலன்சியா: ஸ்பானிய லா லீகா ஆட்டம் ஒன்றில் ரியால் மட்ரிட் குழுவை தோல்வி நெருங்கியபோதும் கோல்காப்பாளர் திபோ கோர்ட்டுவாவின் துணிச்சலான செயல்பாடு தோல்வியில் இருந்து அக்குழுவை மீட்டது.
சொந்த அரங்கில் நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் அடித்த கோல் மூலம் வெலன்சியா முன்னிலை பெற்றது. ஆட்டம் 90 நிமிடங்களைக் கடந்தும் அதே நிலை நீடித்தது.
ஆயினும், இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் முடிவு மாறியது. கூடுதல் நேரத்தின் ஐந்தாவது நிமிடத்தில் ரியாலுக்கு ‘கார்னர்’ வாய்ப்பு கிட்டியது. இதையடுத்து, கோல்காப்பாளர் வேலையை விட்டுவிட்டு கோலடிக்கும் முனைப்புடன் வெலன்சியா கோல் பகுதிக்கு வந்தார் கோர்ட்டுவா. டோனி குரூஸ் உதைத்த பந்தை அவர் தலையால் முட்ட, அதை வலைக்குள் செல்லாமல் தடுத்தார் வெலன்சியா கோல்காப்பாளர். ஆனால், அவரது கைகளில் பட்டு திரும்பிய பந்தை பென்சிமா மீண்டும் வலைக்குள் உதைக்க, ஆட்டம் 1-1 எனச் சமனுக்கு வந்தது.
நாளை மறுநாள் அதிகாலை நடக்கவுள்ள ஆட்டத்தில் பார்சிலோனாவும் ரியாலும் பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன.