நியோன் (சுவிட்சர்லாந்து): சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரைத் தவிர்த்து மற்ற மூன்று இங்கிலிஷ் குழுக்களும் வலிமைமிக்க எதிரணிகளைச் சந்திக்க உள்ளன.
முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக்கை வெல்லும் முனைப்புடன் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழு, 13 முறை வெற்றியாளரான ரியால் மட்ரிட்டை எதிர்கொள்ளவிருக்கிறது.
ரியாலுடன் மோதவிருப்பது குறித்து கருத்துரைத்த சிட்டி காற்பந்து இயக்குநர் பெகிரிஸ்டன், “கடினமான எதிரணிதான். ரியால் மட்ரிட் சிறந்த குழு. நாங்களே சிறந்த குழுவாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆகையால், கடினமாக முயன்று ரியாலை வீழ்த்த முயல்வோம்,” என்றார்.
நடப்பு வெற்றியாளரான லிவர்பூல், அட்லெட்டிகோ மட்ரிட்டையும் 2012ஆம் ஆண்டு வெற்றியாளரான செல்சி, அப்போது இறுதிப் போட்டியில் தான் வீழ்த்திய பயர்ன் மியூனிக் குழுவையும் எதிர்த்தாடவுள்ளன.
கடந்த முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கிண்ணத்தை இழந்த ஸ்பர்ஸ் குழு, லைப்ஸிக் குழுவுடன் பொருதுகிறது.
டோர்ட்மண்ட் - பிஎஸ்ஜி, அடலாண்டா - வெலன்சியா, லியோன் - யுவென்டஸ், நேப்போலி - பார்சிலோனா ஆகியவை இதர நான்கு மோதல்கள்.
காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் சுற்று ஆட்டங்கள் 2020 பிப்ரவரி 18, 19, 25, 26ஆம் தேதிகளிலும் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் மார்ச் 10, 11, 17, 18ஆம் தேதிகளிலும் விளையாடப்படும்.