விசாகப்பட்டினம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற வேண்டுமானால், இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சில் அணித் தலைவர் கோஹ்லி (படம்) மாற்றங்கள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் 287 ஓட்டங்கள் எடுத்தும் பந்துவீச்சில் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க தவறிய இந்திய அணி சொந்த மண்ணில் வெற்றியைக் கோட்டைவிட்டது. எதிரணிக்கு ஓரளவு கடினமான இலக்கை நிர்ணயித்த போதும் இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்த முடியாமல் திணறிய இந்திய அணியில் வீரர்கள் தேர்வில் பாரபட்சம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹெட்மையர், ஹோப்பின் இணையைப் பிரிக்கமுடியாமல் தடுமாறியது இந்திய அணி. மேலும் பந்தடிப்பாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடிய பந்துவீச்சாளர்கள் அவசியம். ரவிந்திர ஜடேஜா, ஷிவம் துபே, குல்தீப் போன்றோர் அந்த பணியைச் செய்யவில்லை.
உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு நேரடியாக வாய்ப்பளிக்கப்பட்ட பந்துவீச்சாளர் கேதர் ஜாதவ் இப்போட்டியில் சரியாக செயல்பட வில்லை. இந்நிலையில் இந்த அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி பந்தடிப்பில் வலுவாக உள்ளது என்றாலும் சென்னையில் நடந்த ஆட்டத்தில் முன்னணி பந்தடிப்பாளர்களான ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக விளையாடியதால் இந்திய அணி கௌரவமான ஓட்டத்தை எட்டியது.
இந்நிலையில் கோஹ்லி பந்துவீச்சு மட்டுமல்லாமல் பந்தடிப்பாளர்கள் வரிசையிலும் கவனம் செலுத்த வேண்டும். ரோகித் சர்மாவுக்குப் பதில் ஷிவம் டுபேவைத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறக்கலாம்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 9 ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ள இந்திய அணி, 10வது தொடரையும் வெல்ல வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.
அதே சமயம், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக தொடரைக் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. கடைசியாக 2006ஆம் ஆண்டு தனது நாட்டில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இரு அணிகளும் இன்று மோதுவது 132வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 131 போட்டியில் இந்தியா 62ல், வெஸ்ட் இண்டீஸ் 63ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 4 போட்டி முடிவில்லை.