லண்டன்: காற்பந்து வீரர் ஸாகாவின் அதிரடி கோல் கிரிஸ்டல் பேலஸ் குழுவைத் தோல்வியில் இருந்து மீட்டது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பிரைட்டன்-கிரிஸ்டல் பேலஸ் குழுக்கள் மோதிய ஆட்டத்தின் முற்பாதி கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் முடிந்தது. பிரைட்டனின் பல கோல் முயற்சிகளை பேலஸ் எளிதில் முறியடித்துவிட்டது.
இதுதவிர பேலசின் தப்பாட்டம் காரணமாக கிடைக்குமென்று எதிர்பார்த்த பெனால்டி வாய்ப்பும் காணொளி நடுவர் உதவிக்குப் பின்னர் கிடைக்காமல் போனதும் பிரைட்டனுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்தது.
ஆனால் இரண்டாம் பகுதி ஆட்டத்தில் பிரைட்டனின் நீல் மாவ்பே உதைத்த பந்து கோலாகி (54வது நிமிடம்) கிரிஸ்டல் பேலசிற்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து இரண்டாவது கோல் போட்டு தனது நிலையை வலுப்படுத்த பிரைட்டன் முயன்று கொண்டிருந்தவேளையில், பேலஸ் வீரர் ஸாகாவின் கோல் விழுந்தது.
பிரைட்டனின் வெற்றிக் கனவிற்குப் பேரிடியாக 74வது நிமடத்தில் விழுந்த அந்த கோலையடுத்து, வேறு கோல் எதுவும் விழாததால் ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது.
ஐந்து முறை தடைவிதிக்கப்பட்டு இப்பருவத்தில் ஆக மோசமான இரண்டாவது வீரர் என்று ஸாகா பெயரெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஸாகா மனரீதியாக மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். ஏனென்றால் ஆடுகளத்தில் இருந்து அவரைப் பற்றி வரும் அவதூறுகளால் அவர் வருத்தப்படவில்லை” என்றார் பேலஸ் நிர்வாகி ரோய் ஹோட்சன்.
2019-12-18 06:10:00 +0800