லண்டன்: மான்செஸ்டர் சிட்டி குழுவின் இப்போதைய துணைப் பயிற்றுவிப்பாளரான மிக்கெல் அர்டேட்டா, 37, ஆர்சனல் குழுவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கேற்ப, அர்டேட்டாவின் எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கிறார் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா.
நிர்வாகி பதவியில் இருந்து உனாய் எமெரி நீக்கப்பட்டதை அடுத்து, ஆர்சனல் முன்னாள் வீரரும் ஸ்பெயின் நாட்டவருமான அர்டேட்டாவை அப்பதவியில் நியமிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆர்சனலுடன் அர்டேட்டா இணைவதை வரவேற்கும் கார்டியோலா, “அர்டேட்டா நல்ல நிர்வாகி. வேலையில் அவர் காட்டும் அக்கறையே இன்றைய அவரது நிலைக்குக் காரணம்,” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஆர்சனல் நிர்வாகியாகப் பொறுப்பேற்க அர்டேட்டா ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.