விசாகப்பட்டினம்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூரியாவுடன் நான்காம் இடத்தைப் பகிர்ந்துகொண்டார் இந்திய வீரர் ரோகித் சர்மா.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது.
முதலில் பந்தடித்த இந்திய அணிக்கு ரோகித் - ராகுல் இணை அபார தொடக்கம் தந்தது.
சிறப்பாக ஆடிய ரோகித் 107 பந்துகளில் சதத்தை எட்டினார். இது அவருக்கு ஒருநாள் போட்டிகளில் 28வது சதம். அவர் 138 பந்துகளில் 159 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ராகுலும் சதமடித்தார். இது அவருக்கு மூன்றாவது சதம். அவர் 102 ஓட்டங்களை எடுத்தார்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்களை எடுத்தது.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தோர் பட்டியலில் முன்னாள் இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்திய அணியின் இப்போதைய தலைவர் விராத் கோஹ்லி (43 சதங்கள்) இரண்டாமிடத்திலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பான்டிங் (30 சதங்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.