சுடச் சுடச் செய்திகள்

குல்தீப் ஹாட்ரிக்; இந்தியா பதிலடி

விசாகப்பட்டினம்: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரின் அபாரமான பந்தடிப்புக்குப் பின்னர் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைக்க, இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 107 ஓட்ட வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் தொடர் 1-1 எனச் சமநிலையை எட்டியுள்ளது.

சென்னையில் நடந்த முதல் போட்டியில் தோற்றதை அடுத்து நேற்று முன்தினம் பகல்  இரவு ஆட்டமாக நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

பூவா தலையாவில் தோற்றபோதும் அதிர்ஷ்டம் என்னவோ இந்தியாவின் பக்கமே இருந்தது. ரோகித் (159)-ராகுல் (102) இருவரும் முதல் விக்கெட்டுக்கு 227 ஓட்டங்களைச் சேர்த்தனர். கோஹ்லி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தபோதும் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 53 ஓட்டங்களையும் ரிஷப் பன்ட் 16 பந்துகளில் 39 ஓட்டங்களையும் விளாச, இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்களை எடுத்தது. கடைசி 20 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 217 ஓட்டங்களைக் குவித்தது.

பெரிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்களை மட்டும் எடுத்து தடுமாறியது. ஆயினும், நான்காவது விக்கெட்டுக்கு ஷே ஹோப்புடன் நிக்கலஸ் பூரன் சேர்ந்ததும் அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயரத் தொடங்கியது. 29 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை எடுக்க, இதே நிலை தொடர்ந்தால் வெற்றி அதன் வசமாகிவிடுமோ என இந்திய ரசிகர்கள் அஞ்சினர்.

அந்த ஆபத்தான கட்டத்திலிருந்து இந்திய அணியை மீட்டார் முகம்மது ஷமி. 47 பந்துகளில் ஆறு சிக்சர், ஆறு பவுண்டரி உட்பட 75 ஓட்டங்களை விளாசிய பூரனையும் அணித்தலைவர் கைரன் பொல்லார்டை ஓட்டமேதும் எடுக்கவிடாமலும் அடுத்தடுத்த பந்துகளில் அவர் வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவும் தொடங்கியது.

33வது ஓவரில் ஷே ஹோப் (78), ஜேசன் ஹோல்டர் (11), அல்ஸாரி ஜோசஃப் (1) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் குல்தீப். இறுதியில், 280 ஓட்டங்களுடன் வெஸ்ட் இண்டீசின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆட்ட நாயகன் விருது ரோகித்துக்குக் கிட்டியது.

தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon