கட்டாக்: தரப்புக்கு ஒரு வெற்றி என்ற நிலையில் இன்று நடக்கும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டியில் வென்று, தொடரை 2-1 எனக் கைப்பற்ற இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கங்கணம் கட்டி வருகின்றன.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வென்று, தொடரையும் தன்வசப்படுத்தினால், அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அந்த அணி தொடர்ச்சியாகக் கைப்பற்றும் பத்தாவது இருதரப்புத் தொடராக அமையும்.
கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த இருதரப்புத் தொடரில் 2-3 என ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்ததால் இம்முறையும் அப்படி நேராமல் இருக்க இந்திய அணி போராடும். ஏனெனில், கடந்த 15 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடந்த இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணி ஒருமுறையேனும் தொடர்ந்து இரண்டு தொடர்களை இழந்ததில்லை.
மாறாக, சென்ற 13 ஆண்டுகளாக இந்திய அணிக்கெதிரான இருதரப்புத் தொடரை வென்றதே இல்லை என்ற ஏக்கத்தைத் தீர்த்து, ஊக்கம் பெற கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆர்வத்துடன் உள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் பல கோடிக்கு ஏலம்போன உற்சாகத்தில் இருக்கும் ஷிம்ரன் ஹெட்மயரும் ஷெல்டன் காட்ரலும் ‘தாங்கள் அந்தத் தொகைக்குத் தகுதியானவர்கள்தான்’ என்பதை மீண்டும் நிரூபிக்கத் தயாராகி வருகின்றனர். அவர்களுடன், கடந்த இரு போட்டிகளிலும் சிம்மசொப்பனமாக விளங்கியபோதும் தம்மை ஏலம் எடுக்காத வருத்தத்தில் இருக்கும் ஷே ஹோப், ஐபிஎல் அணிகளுக்குப் பாடம் புகட்டும் முடிவில் இருக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில், காயமடைந்த சாஹருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட நவ்தீப் சைனி அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளது. களக்காப்பில் மேம்பாடு காணவேண்டிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.
நெருக்கடியில் கோஹ்லி
கட்டாக் பாராபதி விளையாட்டரங்கில் தான் ஆடிய கடைசி நான்கு அனைத்துலக போட்டிகளில் 3, 22, 1, 8 என மொத்தம் 34 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்ததால், பந்தடிப்புக்குச் சாதகமான கட்டாக் ஆடுகளத்தில் கோஹ்லி ஓட்டங்களைக் குவிப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 4 மணிக்குப் போட்டி தொடங்கும்.