பெங்களூரு: தேசிய கிரிக்கெட் பயிலகத்தின் இயக்குநரான ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவை உடற்தகுதித் தேர்வுக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
முதுகுப் பகுதியில் காயமடைந்ததால் கடந்த நான்கு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த பும்ரா தற்போது உடல்நலம் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிலகத்திற்குச் சென்று, தமது உடற்தகுதியை அவர் நிரூபிக்க வேண்டும்.
ஏனெனில், எவராக இருந்தாலும் அங்கு சென்று உடற்தகுதிச் சான்று பெற்று வந்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவர் என்பது விதிமுறை.
இப்படியிருக்க, அவ்வாறு செய்வதில் பும்ரா ஆர்வமில்லாமல் இருந்ததாகவும் அதனால்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்குமுன் அவர் இந்திய அணியினருடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதனிடையே, தேசிய கிரிக்கெட் பயிலகத்தில் பும்ராவை உடற்தகுதிச் சோதனைக்கு உட்படுத்த ராகுல் டிராவிட் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என அந்தப்பயிலகத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக ‘ஸ்போர்ட்ஸ்டார்’ தெரிவித்துள்ளது.
“எந்தச் சூழலிலும் பும்ராவுக்குப் பயிலகம் அனுமதி மறுக்கவில்லை. கடந்த நான்கு மாதங்களாக வேறு ஒருவரிடம் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நபரே பும்ராவின் உடற்தகுதி குறித்து நன்கு அறிந்திருப்பார். அப்படியிருக்கும்போது, கடைசி நேரத்தில் வந்து ‘எனக்கு உடற்தகுதிச் சோதனை நடத்தி சான்றிதழ் கொடுங்கள்’ என்று கேட்டால் எப்படி? மாறாக, இங்குள்ள வசதிகளையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள், யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து உடற்தகுதிச் சோதனை நடத்திக்கொள்ளுங்கள் என்றுதான் அவரிடம் சொன்னோம்,” என்று பயிலகத் தரப்பு விளக்கமளித்துள்ளது.
இதற்கிடையே, டிராவிட்-பும்ரா விவகாரம் குறித்து தான் எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் ஆயினும், அணிக்குத் தேர்வு செய்யப்படும் ஒருவர் தேசிய கிரிக்கெட் பயிலகத்திடம் இருந்து உடற்தகுதிச் சான்று பெற்று வந்தால்தான் அணியில் சேர்க்கப்படுவர் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி.