லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழுவின் புதிய நிர்வாகியாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார் அதன் முன்னாள் ஆட்டக்காரரான மிக்கெல் அர்டேட்டா, 37. வரும் 2023ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் நீடிக்க அர்டேட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதுநாள் வரை மான்செஸ்டர் சிட்டி குழுவின் துணைப் பயிற்றுவிப்பாளராக இருந்த இவர், ஒரு குழுவின் நிர்வாகி பொறுப்பை ஏற்றிருப்பது இதுவே முதன்முறை.
ஆர்சனல் 22 புள்ளிகளுடன் பட்டியலில் பத்தாமிடத்தில் (எவர்ட்டனுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திற்குமுன்) இருப்பதால் அந்தக் குழுவை மேலேற்ற வேண்டிய நெருக்கடியில் தாம் இருப்பதை இவர் உணர்ந்துள்ளார். இவரது வருகையால் ஆர்சனல் வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆனால், தனது பாணிக்கேற்ப விரைவில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் களத்தில் நன்றாக செயல்படாவிடில் விளைவுகள் விரும்பத்தக்கதாக இராது என்றும் ஆர்சனல் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அர்டேட்டா.