லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற காற்பந்து ஆட்டம் ஒன்றில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் செல்சி வீழ்த்தியது. ஸ்பர்சின் தற்போதைய நிர்வாகி ஜோசே மொரின்யோ, செல்சி நிர்வாகியாக இருந்தபோது அவருக்குக் கீழ் விளையாடியவர் ஃபிராங்க் லாம்பார்ட். ஆனால், இப்போது அதே செல்சி குழுவின் நிர்வாகியாக உயர்ந்துள்ள லாம்பார்ட்டுக்கு இந்த வெற்றி இனிதே அமைந்தது. செல்சி நிர்வாகியாக லாம்பார்ட் பதவி ஏற்றதைத் தொடர்ந்து இந்த ஆட்டத்தின் வெற்றியே அவருக்கு ஆக மகத்தானதாக கருதப்படுகிறது.
அவருடைய அளப்பரிய மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தார் செல்சி வீரர் வில்லியம். செல்சியின் இரு கோல்களையும் ஆட்டத்தின் முதல்பாதியில் போட்டு செல்சியின் வெற்றிக்கு அவர் வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலின் நான்காம் இடத்தை செல்சி இப்போதைக்கு உறுதி செய்துள்ளது. ஆனால், செல்சியைவிட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள ஸ்பர்ஸ், லீக் பட்டியலில் ஏழாவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
செல்சிக்கு எதிரான ஆட்டத்தின் முதல்பாதியில் இரு கோல்களை விட்டுக்கொடுத்தது ஸ்பர்சுக்கு பின்னடைவு என்றால், ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் சோன் ஹுவெங் மின்னுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு அவர் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டது ஸ்பர்ஸ் வீரர்களைத் திண்டாட வைத்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை செல்சி வீரர்கள் கோல்காப்பு, தற்காப்பு, தாக்குதல் என அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடினர். அதே வேளையில், தனது சொந்த மண்ணில் இந்த ஆட்டம் நடைபெற்றது என்றாலும் ஸ்பர்ஸ் வீரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. குறிப்பாக, ஸ்பர்ஸ் வீரர்கள் தற்காப்பை வலுப்படுத்த தவறியதாலேயே ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் செல்சிக்காக வில்லியம் முதல் கோலைப் போட்டார். முதல்பாதியின் இறுதிக்கட்டத்தில் பெனால்டி மூலம் மற்றொரு கோலை அவர் அடித்தார்.
இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஸ்பர்ஸ் குழுவே சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கியது. மொரின்யோ நிர்வாகி பொறுப்பேற்றதை அடுத்து, ஸ்பர்ஸ் விளையாடிய கடைசி ஐந்து லீக் ஆட்டங்களில் நான்கில் வென்றது. மாறாக, செல்சி சற்று திக்குமுக்காடியே கடந்த சில ஆட்டங்களைக் கடந்து வந்தது.
இந்த முக்கிய ஆட்டத்திற்கு லாம்பார்ட் வகுத்த உத்திகள் இறுதியில் கைமேல் பலன் அளித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆட்டம் முடிந்தவுடன், ஏதோ கிண்ணத்தை வென்றுவிட்டபோல தமது ரசிகர்கள் முன்னிலையில் லாம்பார்ட் துள்ளிக்குதித்து வெற்றியை நீண்ட நேரம் கொண்டாடினார்.