லண்டனில் உள்ள டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் விளையாட்டரங்கில் அக்குழுவிற்கும் செல்சி குழுவிற்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தின்போது செல்சி வீரர் அன்டோனியோ ரூடிகரின் இனத்தைப் பழித்து ரசிகர்கள் சத்தமிட்டனர். இதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
காற்பந்துப் போட்டியின்போது இனப் பாகுபாட்டை ஒழிக்கும்விதமாக அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் ஆட்டம் இதுதான்.
அதற்கேற்ப, பிற்பாதி ஆட்டத்தின்போது அது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற்றன. ஆயினும், சற்று நேரத்திலேயே பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ரூடிகரின் இனத்தைச் சுட்டி வசைமொழிகள் கிளம்பின.
தம்மைக் ‘குரங்கு’ என ரசிகர்கள் திட்டியதால் கோபமடைந்த ரூடிகர், தமது கைகளை அக்குள் பகுதிக்குள் வைத்து குரங்குபோல செய்து காட்டினார். அத்துடன், தம்மை ரசிகர்கள் அவமதித்தது குறித்து கள நடுவரிடமும் அவர் முறையிட்டார்.
ஃபிஃபா நெறிமுறையின்படி, ‘இனத்தைக் கூறி பழிக்கக்கூடாது’ என இரண்டாவது முறை அறிவிக்கப்பட்டால், ஆட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தப்பட வேண்டும். மூன்றாவது அறிவிப்பு இடம்பெறும் பட்சத்தில் ஆட்டம் கைவிடப்படவேண்டும். ஆனால், ஸ்பர்ஸ்-செல்சி ஆட்டத்தில் மூன்று அறிவிப்புகளுக்குப் பின்னும் ஆட்டம் கைவிடப்படவில்லை.
செல்சி குழு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தில் அக்குழுவின் கோல்காப்பாளர் கெப்பா அரிஸபலகாவை நோக்கியும் ரசிகர்கள் சில பொருட்களை வீசி எறிந்தனர்.
இந்நிலையில், காற்பந்தில் இனவாதம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என்று தொழில்முறை காற்பந்து விளையாட்டாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
“பிரிமியர் லீக்கில் மீண்டும் இனப்பழிப்புச் சம்பவம் இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அண்மைக்காலமாக, இத்தகைய போக்கு பிரிட்டனில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படும் ஒவ்வொரு வீரருக்கும் எங்களது சங்கம் துணை நிற்கும். இனப் பாகுபாட்டை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம்,” என்று விளையாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.