சிட்னி: டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலிய அணியின் கொடியே உச்சத்தில் பறந்து வந்தது.
ஆனால், இப்போதைய நிலை வேறு. டோனி, கோஹ்லி, ரோகித் போன்ற சிறந்த ஆட்டக்காரர்களால் அண்மைய ஆண்டுகளாக இந்திய அணியின் கை ஓங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக, இப்போதைய அணித்தலைவரான விராத் கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகிறது. அதற்கு அவரது பந்தடிப்பும் முக்கிய காரணம் என்றால் மிகையில்லை.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகைப் போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரே ஆட்டக்காரர் கோஹ்லிதான்.
அதை உணர்ந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், கடந்த பத்தாண்டுகளுக்கான கனவு டெஸ்ட் அணிக்கு கோஹ்லியை அணித் தலைவராக அறிவித்துள்ளது. ஆஸி., கிரிக்கெட் சங்கத்தின் கனவு அணியில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும் இவரே.
‘கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ கனவு அணி: விராத் கோஹ்லி (அணித் தலைவர்), அலெஸ்டர் குக், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் (நால்வரும் இங்கிலாந்து), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், நேதன் லயன் (மூவரும் ஆஸ்திரேலியா), ஏபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் (இருவரும் தென்னாப்பிரிக்கா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து).