மெல்பர்ன்: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் (பாக்சிங் டே டெஸ்ட்) நேற்று தொடங்கியது. நியூசிலாந்து அணித் தலைவர் வில்லியம்சன் பூவா தலையாவில் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பந்தடிக்க அழைத்தார்.
முதல் ஓவரில் நான்காவது பந்தில் ஜோ பேர்ன்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்தில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு வார்னருடன் மார்னஸ் லாபஸ்சாக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
இருப்பினும், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. வார்னர் 41 ஓட்டங்களில் வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தார். 64 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் அவர் இந்த ஓட்டங்களைக் குவித்தார். ஆஸ்திரேலியா 61 ஓட்டங்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். லாபஸ்சாக்னே - ஸ்மித் ஜோடியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எளிதில் பிரிக்க முடியவில்லை. அதேவேளையில் லாபஸ்சாக்னே - ஸ்மித் ஜோடியால் விரைவாக ஓட்டங்களையும் குவிக்க இயலவில்லை.
லாபஸ்சாக்னே 132 பந்துகளில் அரைசதம் அடித்தார். லாபஸ்சாக்னே தொடர்ச்சியாக நான்காவது சதத்தை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் 63 ஓட்டங்களில் கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கை 144 ஆக இருந்தது.
லாபஸ்சாக்னே நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 143 ஓட்டங்களும் அதற்கு முன்னதாக பாகிஸ்தான் டெஸ்ட்டில் 162 ஓட்டங்களும், 185 ஓட்டங்களும் எடுத்து இருந்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக ஆடி 103 பந்துகளில் அரைசதத்தைத் தொட்டார். வடே 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஸ்மித்தடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆஸ்திரேலியா முதல்நாளில் 90 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித் 77 ஓட்டங்களுடனும் டிராவிஸ் ஹெட் 25 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஸ்மித் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால் ஆஸ்திரேலியா அதிக ஓட்டங்கள் குவிக்க வாய்ப்புள்ளது.