மான்செஸ்டர்: கடந்த ஒன்பது ஆண்டுகளாக மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் அர்ஜெண்டினா ஆட்டக்காரரான செர்ஜியோ அகுவேரோ ஈடுசெய்ய முடியாத, இணையற்ற வீரர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார் அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா.
சிட்டிக்காக ஆக அதிகமாக 244 கோல்களை அடித்திருக்கும் அகுவேரோ, அக்குழுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டுடன் முடிவதால் அதன்பின் சொந்த நாட்டிற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டிற்குப் பிறகும் சிட்டிக்காக அகுவேரோ தொடர்ந்து விளையாடுவார் என கார்டியோலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“அகுவேரோவை வேறு யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவருக்கு இணையான இன்னொருவரைத் தேடுவது எனக்கிருக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று. அவர் சிட்டிக்காக தொடர்ந்து விளையாடலாம். ஆயினும், அது அவரது உடல்நிலை, விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்தது,” என்றார் கார்டியோலா.
சில வேளைகளில் எதிர்பார்த்தபடி நடக்காவிடினும் தான் சொல்வதைக் கேட்டு அதன்படி ஆடக்கூடியவர், தன்னடக்கமுள்ளவர் என்றும் நட்சத்திர வீரர்களிடம் இந்தக் குணத்தைக் காண்பது அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இன்று அதிகாலை நடக்கவிருந்த ஆட்டத்தில் உல்வ்ஸ் குழுவை வென்றிருந்தால் சிட்டி இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கும்.