சென்னை: கடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இருந்த தமிழக வீரர் அஸ்வின் செய்த ஒரு செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை ‘மன்கடிங்’ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். அதாவது, அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்பே பட்லர் ‘கிரீஸை’ விட்டு வெளியேறி, ஓட்டமெடுக்க ஆயத்தமானார். இதைக் கண்ட அஸ்வின், பந்தால் ஸ்டம்ப்பைத் தட்டிவிட, பட்லர் ஆட்டமிழந்ததாக நடுவரும் அறிவித்தார்.
‘விதிமுறைப்படி அஸ்வின் செய்தது சரிதான்’ என ஒருசாரார் ஆதரவுக்கரம் நீட்ட, அவர் கிரிக்கெட்டின் மாண்பைக் குலைத்துவிட்டதாக இன்னொரு சாரார் குறைகூறினர்.
இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் யாரை அம்முறையில் ஆட்டமிழக்கச் செய்வீர்கள் என ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம் கேட்டதற்கு, “எவராக இருந்தாலும் சரி! கிரீஸைவிட்டு வெளியே சென்றால் ‘மன்கடிங்’ செய்வேன்,” எனக் கூறி, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார் இம்முறை டெல்லி அணிக்காக ஆடவுள்ள அஸ்வின்.