புதுடெல்லி: உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதன் பிறகு 7 தொடர்களில் வரிசையாக தோல்வியை தழுவினார். இதனால் சிந்துவைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களால் நான் துவண்டுவிடப் போவதில்லை என்று புத்தாண்டில் சிந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
உலக பேட்மிண்டன் போட்டி உண்மையிலேயே எனக்கு சிறப்பானதாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சில போட்டிகளில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தேன். ஆனாலும் மனம் தளரவில்லை. நேர்மறை எண்ணத்துடனேயே செயல்பட்டேன். எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியம் கிடையாது. சில நேரங்களில் நீங்கள் அற்புதமாக விளையாடலாம். சில நேரம் நீங்கள் தவறு செய்யலாம். தவறுகளில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதும், வலுவான வீராங்கனையாக மீண்டு வருவதும்தான் முக்கியம்.
என்னிடம் இருந்து எப்போதும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நெருக்கடியும் விமர்சனங்களும் எனது ஆட்டத்திறனை பாதிக்காது. ஏனெனில், நான் களமிறங்கும் போதெல்லாம் வெற்றி பெறவேண்டும் என்று தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான் விளையாட்டாளர்களின் உயரிய இலக்காக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் இந்த ஒலிம்பிக் சீசன் நன்றாக அமையும். தனிநபர் பிரிவில் இந்தியாவில் இருந்து மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே இரண்டு பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றி அந்த வரிசையில் நானும் இணைவேன்என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.