'ஆர்சனலை விட்டு பியர் எமெரிக் போகமாட்டார்'

'ஆர்சனலை விட்டு பியர் எமெரிக் போகமாட்டார்'

2 mins read
0a74642b-5955-40d0-bed4-aa43f7644bf5
ஆர்சனல் காற்பந்துக்குழுவின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் பியர் எமெரிக் ஒபமெயாங்கை. படம்: கோப்புப்படம் -

லண்டன்: பார்சிலோனா, இன்டர் மிலான் ஆகிய முன்னணி காற்பந்துக் குழுக்கள் பியர் எமெரிக் ஒபமெயாங்கை கவ்விச் செல்ல கண்கொத்திப் பாம்பாக கவனித்துவரும் வேளையில், "அவர் எங்கேயும் செல்லப்போவதில்லை," என்று கூறி ஆர்சனல் குழு ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் அதன் நிர்வாகி மிக்கெல் அர்டேட்டா.

பிரான்சில் பிறந்தாலும் அனைத்துலகப் போட்டிகளில் கபோன் நாட்டைப் பிரதிநிதித்து வருகிறார் 30 வயதான ஒபமெயாங். ஜெர்மனியின் டோர்ட்மண்ட் குழுவில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டில் ஆர்சனலுக்கு மாறிய இவர், அக்குழுவின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரராகத் திகழ்ந்து வருகிறார்.

ஆயினும், 2017ஆம் ஆண்டில் எஃப்ஏ கிண்ணத்தைக் கைப்பற்றிய பிறகு ஆர்சனல் குழு எந்தக் கிண்ணத்தையும் வென்றதில்லை. அத்துடன், தொடர்ந்து 17 பருவங்களாக சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய அக்குழு, கடந்த மூன்று பருவங்களாக அந்த வாய்ப்ப்பையும் இழந்துவிட்டது.

போதாக்குறைக்கு, நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் படுமோசமாக விளையாடி வந்ததால் பொறுமை இழந்த ஒபமெயாங், ஆர்சனலுடனான ஒப்பந்தம் இன்னும் 18 மாதகாலம் இருந்தபோதும் அக்குழுவைவிட்டு விலகத் தீர்மானித்ததாகப் பேச்சு அடிபட்டது.

இந்த நிலையில்தான் ஆர்சனலின் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் அதன் முன்னாள் ஆட்டக்காரர் மிக்கெல் அர்டேட்டா. அவர் வந்த பிறகு குழுவின் செயல்பாடு மேம்பட்டுள்ளதால் ஒபமெயாங் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆர்சனல் குழுவிலேயே நீடிக்க முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

"நான் 100% ஆர்சனல் ஆட்டக்காரர்தான்," என்று பிரெஞ்சு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவர் சொன்னார். அதேபோல, இவரில்லாத ஆர்சனலைத் தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று அர்டேட்டாவும் குறிப்பிட்டுள்ளார்.