சிட்னி: கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கு சதங்களை விளாசி, முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன். கடந்த நவம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 185, 2வது போட்டியில் 162, டிசம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 143 ஓட்டங்களை எடுத்திருந்தார் இவர்.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் இவரது சத வேட்டைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அப்போட்டியின் முதல் இன்னிங்சில் 63, 2வது இன்னிங்சில் 19 ஓட்டங்களை எடுத்த இவர், நேற்று தொடங்கிய 3வது போட்டியில் மீண்டும் சதம் அடித்து அசத்தினார்.
முதலிரு போட்டிகளிலும் வென்று 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில், வில்லியம்சன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட, டாம் லேதம் தலைமையின்கீழ் நியூசிலாந்து அணி 3வது போட்டியில் களமிறங்கியது. லபுஷேன் 130 ஓட்டங்களுடன் களத்திலிருக்க, முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களை எடுத்திருந்தது.