பெங்களூரு: பெங்களூரில் நேற்று இரவு நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் காற்பந்து ஆட்டத்தில் பெங்களூர் குழுவும் கோவாவும் மோதின.
தொடக்கத்திலிருந்தே இரு குழுக்களின் வீரர்களும் கோல் போட முயன்றனர். ஆனால் முற்பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. பிற்பாதி ஆட்டத்தில் பெங்களூர் குழுவின் சுனில் சேத்ரி 59வது நிமிடத்தில் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் கோவாவின் ஹியூகோ பவுமாஸ் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.
ஆட்டம் முடியும் கட்டத்தில் சுனில் சேத்ரி மீண்டும் கோல் போட்டு பெங்களூரின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில், பெங்களூர் குழு 2-1 எனும் கோல் கணக்கில் கோவா குழுவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் பெங்களூர் குழு தான் களமிறங்கிய 11 ஆட்டங்களில், 5 வெற்றிகள், 2 தோல்விகள் மற்றும் 4 ஆட்டங்களில் சமநிலை கண்டு 19 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோவா குழு, 6 வெற்றிகள், 2 தோல்விகள் மற்றும் 3 ஆட்டங்களில் சமநிலை கண்டு 21 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.