மான்செஸ்டர்: இபிஎல் காற்பந்துத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ள மான்செஸ்டர் சிட்டி, எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நேற்று அதிகாலை போர்ட் வேல் குழுவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் சிட்டி. இப்போட்டியில் ஏழு மாற்றங்களுடன் சிட்டி குழுவைக் களமிறக்கினார் நிர்வாகி பெப் கார்டியோலா.
முக்கியமாக காயத்திலிருந்து குணமடைந்த ஜான் ஸ்டோன்ஸ் ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று விளையாடியது சிட்டிக்கு பக்கபலமாக இருந்தது. இருந்தாலும் 20வது நிமிடத்தில் சிட்டி போட்ட முதல் கோலை 35வது நிமிடத்தில் வேல் வீரர் டாம் போப் சமன் செய்த விதம் சிட்டிக்கு சவாலாக அமைந்தது.
மைதானத்தில் குழுமியிருந்த வேல் ரசிகர்கள் சிட்டிக்கு எதிரான கோலைக் கொண்டாடினார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி ஏழு நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பில் ஃபோடன் உதவியோடு செர்ஜியோ அகுவேரோ கோல் வலைக்குள் பந்தை அனுப்பினார்.
டெய்லர் ஹர்வுட்-பெல்லிஸ் சிட்டிக்காக போன்ற மூன்றாவது கோல் ஆஃப்சைட் என நிராகரிக்கப்பட்டது. ஆனால், காணொளி நடுவர் உதவிக்குப் பிறகு அது கோலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சிட்டிக்காக அவர் போட்ட முதல் கோலாகும்.
ஏஞ்சலினோ உதைத்த பந்தை வேல் கோல்காப்பாளர் ஸ்காட் பிரவுனை ஏமாற்றி கோலாக்கினார் பில் ஃபோடன். “டிம் போப்பின் கோல் ஆபத்தானது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் நான் கோல் வாய்ப்புகளை உருவாக்கியதால் நான்காம் சுற்றுக்கு முன்னேற முடிந்தது,” என்றார் கார்டியோலா.
ஆனால் உல்வ்ஸ் குழுவை வீழ்த்த முடியாத மான்செஸ்டர் யுனைடெட் குழுவோ நான்காவது சுற்றுக்கு முன்னேறுவதற்கு காத்திருக்கும்படியானது. அதாவது வெற்றியாளரை முடிவு செய்ய இக்குழுக்கள் மறுபோட்டியில் விளையாட வேண்டும்.
இப்போட்டியில் மேன்யூவின் ஒரேயொரு கோல் முயற்சியாக மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை உல்வ்ஸ் வீரர்கள் அபாரமாக தடுத்தாடினர்.அண்மைகாலமாக மேன்யூவின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நிலையில், இந்த போட்டியும் கோலில்லா சமநிலை கண்டது மேன்யூவிற்கு எதிராக கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த பருவ எஃப்ஏ கிண்ண காலிறுதியில் மேன்யூவை உல்வ்ஸ் குழு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.