மட்ரிட்: லா லீகா காற்பந்துப் பட்டியலில் கீழே இருக்கும் எஸ்பேன்யால் குழு, பார்சிலோனாவை 2-2 என சமநிலை கண்டது.
23வது நிமிடத்திலேயே எஸ்பேன்யாலின் டேவிட் லோபஸ் பந்தைத் தலையால் முட்டி தள்ளி கோல்வலைக்குள் அனுப்பி பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
பிற்பாதி நேரத்தில் ஆட்டத்தைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்த பார்சிலோனா அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது.
50வது நிமிடத்தில் சுவாரெஸ் போட்ட கோல் எஸ்பேன்யாலின் கோலைச் சமன் செய்தது.
அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில், விடாலின் கோலால் முன்னிலை பெற்றது பார்சிலோனா.
அதன்பிறகு, பார்சிலோனா வீரர் ஒருவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆட்டம் முடியப் போகும் நேரத்தில் எஸ்பேன்யாலின் மாற்று வீரராக களமிறங்கிய சீன வீரர் வூ லீ ஒரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இதன் மூலம் பார்சிலோனாவுக்கு எதிராக கோல் போட்ட முதல் சீன வீரர் பெருமையையும் பெற்றார் அவர்.
இன்னோர் ஆட்டத்தில் ரியால் மட்ரிட் 3-0 என கெடாஃபே குழுவை வென்றது. இதையடுத்து, பார்சிலோனாவும் ரியாலும் 40 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ஆனால் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பார்சிலோனா முதல் இடத்தில் உள்ளது.