வெலிங்டன்: கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்த பந்தடிப்பாளர்கள் வரிசையில் உலகின் 7வது பந்தடிப்பாளராக நியூசிலாந்தின் லியோ கார்ட்டர் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்தில் 'சூப்பர் ஸ்மாஷ்' 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கேன்டர்பரி கிங்ஸ், நார்த்தன் நைட்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று லீக் ஆட்டம் நடந்தது.
இதில் கேன்டர்பரி கிங்ஸ் அணியின் இடதுகை பந்தடிப்பாளர் லியோ கார்ட்டர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டினார்.
நார்த்தன் நைட்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆன்டன் டெவ்சிச் வீசிய பந்தில் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை லியோ கார்ட்டர் விளாசினார்.
லியோ கார்ட்டர் 29 பந்துகளில் 70 ஓட்டங்கள் சேர்த்து தனது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
உலகளவில் அனைத்துலக, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6 பந்தடிப்பாளர்கள் மட்டுமே ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்துள்ளனர்.
அதில் கேரி சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, ஹெர்ஷல் கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங், வோர்ஸ்டர்ஷியர் அணி வீரர் ராஸ் ஒய்ட்லி, ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஸஸாய் ஆகியோரே அந்த அறுவர்.
அதுமட்டுமல்லாமல் 20 ஒவர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 4வது வீரரும் லியோ கார்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.