ஆன்ஃபீல்ட்: லிவர்பூல் காற்பந்துக் குழுவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் ஆர்வத்தில் களமிறங்கிய எவர்ட்டனுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் மூன்றாவது சுற்று போட்டியில் வலுவான குழுவைக் களமிறக்கிய போதும் எவர்ட்டன் குழுவால் இளம் வீரர்கள் நிறைந்த லிவர்பூலை வெற்றி கொள்ள முடியாமல் போனது.
இதனால், 1999ஆம் ஆண்டிற்குப் பிறகு, லிவர்பூலை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியாதது எவர்ட்டனுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.
சொந்த மைதானம் என்று மட்டுமல்லாமல் எவர்ட்டனால் கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு லிவர்பூலை வெல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் மூன்று அறிமுக வீரர்களுடன் பெரும்பாலும் இளம் வீரர்கள் கொண்ட குழுவை களமிறக்கியது இதற்கு முன் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் மட்டுமே லிவர்பூல் கையாண்ட உத்தி.
செஃபீல்டு யுனைடெட் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என வென்றிருந்தது லிவர்பூல்.
அதேபோல் நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்திலும் 71வது நிமிடத்தில் 18 வயது இளம் வீரரான ஜோன்ஸ் போட்ட ஒற்றை கோலால் வெற்றியை தனதாக்கியது லிவர்பூல். முற்பாதி ஆட்டத்தில் கோல்வலையை நோக்கி வந்த எவர்ட்டனின் மூன்று முயற்சிகளைத் லிவர்பூல் கோல்காப்பாளர் ஏட்ரியனால் தடுக்க முடியாமல் போயிருந்தால் எவர்ட்டன் நிச்சயமாக முன்னிலை பெற்றிருக்கும்.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கிளோப், “நல்ல பரபரப்பான ஆட்டமாக இருந்தது. இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என ஒவ்வொருவரும் நம்பமுடியாத அளவுக்கு அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்,” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், மிடல்ஸ்பரோ குழுக்கள் மோதிய இன்னோர் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
50வது நிமிடத்தில் ஃபிளெட்சரின் கோலால் முன்னிலை பெற்றது மிடல்ஸ்பரோ.
எனவே எஃப்ஏ கிண்ணத்தில் இருந்து வெளியேறக்கூடிய ஆபத்தில் இருந்த ஸ்பர்ஸ் குழுவை 61வது நிமிடத்தில் கோலடித்து காப்பாற்றினார் லூக்கஸ் மொரா.
இதையடுத்து நான்காவது சுற்றுக்கு செல்வது யார் என்பதை உறுதி செய்ய இக்குழுக்கள் மீண்டும் ஒருமுறை மோத வேண்டியுள்ளது.
நாட்டிங்ஹம் குழுவிற்கு எதிராக இரண்டு கோல்கள் போட்ட செல்சி 4வது சுற்றுக்கு முன்னேறியது.
டார்பி கவுன்டி குழு ஒரு கோல் போட்டு கிறிஸ்டல் பேலஸ் குழுவை எஃப்ஏ கிண்ணத் தொடரில் இருந்து வெளியேற்றி அதிர்ச்சி அளித்தது.