சிட்னி: கிரிக்கெட் வீரர் நேதன் லயனின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.
இந்த அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
பூவா, தலையா வென்ற ஆஸ்திரேலியா பந்தடிப்பைத் தேர்வு செய்தது. இதையடுத்து லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்த ஆஸ்திரேலியா 454 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 251 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் நேதன் லயன் 5 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 173 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இதனால், ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.
டேவிட் வார்னர் 111 ஓட்டங்களுடனும் லாபஸ்சாக்னே 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 416 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களை மிட்செல் ஸ்டார்க் வெளியேற்றினார்.
அதன்பின் வந்த வீரர்கள் நேதன் லயனின் பந்துவீச்சில் வெளியேறினர். நியூசிலாந்து அணியின் கிராண்ட்ஹோம் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தாலும் 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்தின் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.
இதனால், நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் லாபஸ்சாக்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
டெய்லரின் சாதனை
இப்போட்டியில் 21 ஓட்டங்கள் எடுத்தபோது, நியூசிலாந்தின் ஆக அதிக ஓட்டங்கள் எடுத்தவர் என்ற சாதனை படைத்தார் ராஸ் டெய்லர்.
அவர் 99 டெஸ்ட் போட்டிகளில் 175 இன்னிங்ஸ் விளையாடி இச்சாதனையை எட்டியுள்ளார்.
இதன் மூலம் 7,172 ஓட்டங்கள் எடுத்திருந்த நியூசிலாந்தின் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் சாதனையை ராஸ் டெய்லர் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.