வாய்ப்புகளை நழுவவிட்ட லீட்சை தண்டித்த ஆர்சனல்

வாய்ப்புகளை நழுவவிட்ட லீட்சை தண்டித்த ஆர்சனல்

2 mins read
88320c6f-2823-44eb-94c1-b84b3e3f854f
பாய்ந்து சென்று ஆர்சனலின் வெற்றி கோலைப் ரீஸ் நெல்சன் (நடுவில்). நெல்சனைத் தடுக்க முடியாமல் செய்வதறியாது தவிக்கும் லீட்ஸ் ஆட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றைக் கோட்டைவிட்ட லீட்ஸ் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்த ஆர்சனல் இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஆர்சனலின் வெற்றி கோலை பிற்பாதி ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் ரீஸ் நெல்சன் போட்டார். இங்கிலாந்தின் இரண்டாம் நிலை காற்பந்து லீக் போட்டியில் முன்னிலை வகிக்கும் லீட்ஸ் ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்தியது.

இருப்பினும், அக்குழுவால் கோல் போட முடியாமல் போனது. அதிர்ஷ்டமும் அதற்குக் கைகொடுக்கவில்லை. லீட்ஸ் குழுவின் பேட்ரிக் பேம்ஃபர்ட் அனுப்பிய பந்து கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.

லீட்ஸ் கோல் போட முடியாமல் தவித்ததற்கு ஆர்சனலின் கோல்காப்பாளர் எமிலியானோ மார்டினேசும் முக்கிய காரணமாக அமைந்தார். ஜேக் ஹெரிசன், எஸ்கியான் அலியோஸ்கி ஆகியோரின் கோல் முயற்சிகளை அவர் திறம்பட முறியடித்தார்.

இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் கோல் போட்டதும் தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொள்ள ஆர்சனல் போராடியது. அணித் தலைவர் பியேர்-எமரிக் ஒபமயாங் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவர் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை.

எதிரணி கோல் போட்டு முன்னிலை வகித்தும் மனந்தளராது விளையாடிய லீட்ஸ் குழுவைச் சமாளிக்க ஆர்சனல் சிரமப்பட்டது. லீட்ஸ் குழுவின் ஆட்டக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி ஆர்சனலுக்கு தீராத் தலைவலியைக் கொடுத்தனர்.

இருப்பினும், லீட்ஸ் குழுவால் இறுதி வரை கோல் போட முடியாமல் போக, ஆர்சனல் ஒருவழியாகத் தப்பித்தது. நான்காவது சுற்று ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை ஆர்சனல் சந்திக்கிறது. புத்தாண்டு அன்று மான்செஸ்டர் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.