துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அண்மையில் வெளியிட்ட டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். அந்த ஒருவரும் தமிழர் என்பது பெருமைக்குரிய விஷயம். அந்தத் தனிச்சிறப்புக்குச் சொந்தக்காரர் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின்.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 2015, 2016ஆம் ஆண்டுகளில் அஸ்வினே முதலிடத்தில் இருந்தார். நான்கு பருவங்களுக்குமுன் அஸ்வின், ஜடேஜா, இலங்கையின் ரங்கனா ஹெராத் ஆகிய மூவரும் முதல் நான்கு இடங்களுக்குள் இருந்தனர்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. முதல் பத்தில் ஒன்பது இடங்களை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவின் பும்ரா ஆறாமிடத்திலும் ஷமி பத்தாமிடத்திலும் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தமட்டில் அஸ்வின் ஒன்பதாம் இடத்திலும் ஜடேஜா 17ஆம் இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் 14ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்தடிப்பாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. ஆயினும், சேத்தேஸ்வர் புஜாரா ஆறாம் இடத்திற்கும் அஜின்கிய ரகானே ஒன்பதாம் இடத்திற்கும் இறக்கம் கண்டனர்.

