பார்சிலோனாவை அலறவிட்ட அட்லெட்டிகோ

பார்சிலோனாவை அலறவிட்ட அட்லெட்டிகோ

1 mins read
f5cdc473-5a44-499c-b748-64fbe5b6e024
அட்லெட்டிகோ மட்ரிட்டின் கோல் கணக்கை கோக்கே (வலது) தொடங்கி வைக்க, அதை முடித்து வைத்தார் ஆங்கல் கொர்ரியா. படம்: ஏஎஃப்பி -

ஜெட்டா: ஸ்பானிய சூப்பர் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியால் மட்ரிட் முன்னேறிய நிலையில், இன்னோர் அரையிறுதியில் பார்சிலோனா குழு விளையாடவிருந்ததால் அவ்விரு குழுக்களுக்கு இடையிலான இன்னொரு 'எல் கிளாசிக்கோ' ஆட்டத்தைக் காணலாம் என காற்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதை நடக்கவிடாமல் தடுத்த அட்லெட்டிகோ மட்ரிட் குழு, ஸ்பானிய சூப்பர் கிண்ணம் மட்ரிட் குழுக்களுக்குத்தான் என உரக்க அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் அட்லெட்டிகோ 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவிற்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. இந்த ஆட்டத்தின் ஐந்து கோல்களும் பிற்பாதியிலேயே விழுந்தன.

ஆட்டத்தில் பார்சிலோனா குழுவினர் மேலும் இரு கோல்களை அடித்தபோதும் 'காணொளி நடுவர் உதவி' தொழில்நுட்பத்தின் துணையுடன் அவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன.

நாளை பின்னிரவு நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் ரியாலும் அட்லெட்டிகோவும் கிண்ணத்திற்காக பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

ஸ்பானிய லீக்கில் முதலிரு இடங்களைப் பிடித்த குழுக்கள், அரசர் கிண்ண இறுதிப் போட்டியில் மோதிய குழுக்கள் என நான்கு குழுக்கள் பங்குபெறும் வகையில் இம்முறை சூப்பர் கிண்ணப் போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டன.