பயிற்சியின்போது பாய்ந்த அம்பு

1 mins read
d649d94a-2f9a-4930-9cfc-62de34671226
2020-01-11 06:10:00 +0800 -

21 வயதுக்குட்பட்ட இந்திய விளையாட்டாளர்கள் போட்டியிடும் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம், கௌஹாத்தி நகரில் நேற்று தொடங்கின. இம்மாதம் 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 20 விளையாட்டுகளில் போட்டியாளர்கள் பதக்கங்களுக்காகப் போட்டியிட உள்ளனர். போட்டியாளர்களுள் ஒருவராக இல்லாதபோதும் திப்ருகர் மாவட்டத்தில் நடந்த அம்பெய்தல் விளையாட்டுப் பயிற்சியில் ஷிவாங்கினி என்ற இந்த 12 வயதுச் சிறுமியும் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இன்னொரு விளையாட்டாளர் எய்த அம்பு இவரது தோள்பட்டையைத் துளைத்து, கழுத்து வரை சென்றுவிட்டது. உடனடியாக விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டார். இவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விமானக் கட்டணத்தையும் இவரது சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஷிவாங்கினி பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. படம்: இந்திய ஊடகம்