ஸ்டீவன் ஜெரார்ட்: லீக் பட்டத்தை லிவர்பூல் வென்றால் எனது நீண்டநாள் மனவலி நீங்கும்

ஸ்டீவன் ஜெரார்ட்: லீக் பட்டத்தை லிவர்பூல் வென்றால் எனது நீண்டநாள் மனவலி நீங்கும்

2 mins read
f7b82656-1902-4010-ab60-68e4971627ca
ரேஞ்சர்ஸ் குழு நிர்வாகியாக பொறுப்பு வகிக்கும் ஜெரார்ட். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை லிவர்பூல் காற்பந்துக் குழு வென்றால் தமக்கு நீண்டகாலமாக இருந்து வந்த மனவலி நீங்கும் என்று லிவர்பூல் குழுவின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஜெரார்ட் கூறியுள்ளார்.

2013/14 லீக் பருவத்தின்போது லீக் பட்டத்தை வெல்லக்கூடிய வாய்ப்பை நூலிழையில் லிவர்பூல் நழுவவிட்டதற்கு தாம்தான் காரணம் என ஜெரார்ட் அறிவார்.

அப்போது பட்டத்தை வெல்லக்கூடிய நிலையில் லிவர்பூல் இருந்தது. ஆனால், செல்சிக்கு எதிராக லீக் பருவத்தின் 36வது ஆட்டத்தின்போது மத்திய திடலில் ஜெரார்ட் வழுக்கி விழுந்தார்.

இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட செல்சி வீரர் டெம்பா பா, ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார்.

ஆன்ஃபீல்டில் நடைபெற்ற அந்த ஆட்டத்தை 2-0 எனும் கோல் கணக்கில் செல்சி வென்றது.

அப்போது லீக் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருந்த மான்செஸ்டர் சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் இடையே புள்ளி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது.

ஜெரார்ட் வழுக்கி விழுந்ததால் லிவர்பூல் சறுக்கியது

லீக்கின் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலசுடன் மேன்சிட்டி சமநிலை கண்டது. இதனால் எதிர்பாராத விதமாக இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் லீக் பட்டியலில் இரண்டாவது நிலைக்கு லிவர்பூல் சறுக்கியது.

"லீக் பட்டத்தை நழுவவிட்டது குறித்து இதுநாள் வரை நான் நினைத்து வருந்துகிறேன். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு லீக் பட்டத்தை லிவர்பூல் வென்றால் நிச்சயமாக எனது மனவலி நீங்கும்," என்று ஜெரார்ட் கூறினார்.

ஸ்காட்லாந்து பிரிமியர் லீக்கில் ரேஞ்சர்ஸ் குழுவின் நிர்வாகியாக தற்போது பொறுப்பு வகிக்கும் 39 வயது ஜெரார்ட், நீண்டகாலமாக பரம எதிரியான செல்டிக் குழுவின் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிந்து லீக் பட்டத்தை ரேஞ்சர்ஸ் குழு வெல்வதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இம்முறை ரேஞ்சர்ஸ் குழு பட்டத்தை வென்றால், 2005ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் ஏசி மிலானை லிவர்பூல் வீழ்த்தியதன் மூலம் படைத்த சாதனைக்குச் சமம் என்று ஜெரார்ட் கூறினார்.