செல்ல மகளின் முன்னிலையில் வாகை சூடினார் செரினா

ஆக்லாந்து: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸில் செரினா வில்லியம்ஸ் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் அவர் தமது மூன்றாண்டு வெற்றி தாகத்தைத் தீர்த்துக்கொண்டார்.

38 வயது உலக டென்னிஸ் நட்சத்திரமான செரினா நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலாவை 6-3, 6-4 என்னும் நேர் செட்டில் வென்று பட்டத்தைத் தட்டிச் சென்றார். 

கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி பெற்ற குதூகலத்தில் தமது கைகளை செரினா உயர்த்தியபோது அவரது கணவர் அலெக்ஸிஸ் ஒஹானியனும் இரண்டு வயது மகள் ஒலிம்பியாவும் அவரைக் கண்டனர்.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு பிள்ளைக்குத் தாயான பின்னர் அவர் வென்றிருக்கும் முதல் பட்டம் இது. அந்த ஆண்டில் ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டி நடைபெற்றபோது அவர் கருவுற்றிருந்தார். 

முன்னதாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் செரினாவின் நெருங்கிய தோழியான கேரொலின் வேஸ்னியாக்கியை தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் பெகுலா. இருப்பினும் இறுதிப் போட்டியில் செரினாவிடம் அவர் வீழ்ந்தார். இந்த வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுத் தொகையை ஆஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரண நிதிக்கு வழங்குவதாக செரினா அறிவித்தார்.