பயிற்சியின்போது ரோகித் சர்மா காயம்

மும்பை: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது.

இந்த அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் இரு அணிகளும் கடைசியாக மோதிய உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

ஆனால் உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் 2 ஆட்டத்தில் வென்ற இந்தியா, அடுத்த 3 போட்டியில் தோற்று தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது.

அதற்கு தற்போதைய தொடரில் இந்திய அணி பழி தீர்க்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி பந்தடிப்பு, பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரும் துணை அணித் தலைவருமான ரோகித் சர்மாவுக்கு நேற்று பயிற்சியின்போது பந்து தாக்கியதில் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.