11வது முறையாக சூப்பர் கிண்ணம் கைசேர்ந்த மகிழ்ச்சியில் ரியால்

ஜெடா: அட்லெட்டிகோ மட்ரிட் காற்பந்துக் குழுவை பெனால்டி வாய்ப்புகளில் வீழ்த்தி ஸ்பானிய சூப்பர் கிண்ணத்தை 11வது முறையாக கைப்பற்றியது ரியால் மட்ரிட் குழு.

வழக்கமான ஆட்ட நேரத்தின் போது இரு குழுக்களின் கோல் காப்பாளர்களின் திறமான செயல்பாட்டால் ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.

79வது நிமிடத்தில் கைரன் டிரிப்பியே, மொராட்டா ஆகியோரின் கைகளில் பட்டு வந்த பந்தைக் கோல்காப்பாளர் கோர்ட்டுவா அபாராமாக தடுத்தாடினார். எனவே ஆட்டம் சமநிலை கண்டது. 

அதையடுத்து கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தின்போது, அல்வேரோ மொராட்டா கோல்வலைக்குள்  பந்தை உதைக்கவிருந்த நேரத்தில் ரியாலின் வால்வெர்டே அவர் மீது மோதியதால் அட்லெட்டிகோவின் கோல் வாய்ப்பு பறிபோனது. 

அதன்பிறகு வால்வெர்டே  சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட, ரியால் 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது.

கூடுதல் நேரத்தின்போதும் கோல் எதுவும் விழாததால், பெனால்டி முறை பின்பற்றப்பட்டது.

இதில், அட்லெட்டிகோவின் சாவெல் நிகெஸ் கோல் வலைக்குள் பந்தை அனுப்பும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தாமஸ் பார்டே உதைத்த பந்தை லாவகமாகத் தடுத்துவிட்டார் ரியால் கோல்காப்பாளர் கோர்ட்டுவா.

இதையடுத்து, மட்ரிட் குழுவின் வெற்றி கோலை செர்ஜியோ ராமோஸ் போட, இப்பருவத்தில் முதல் கிண்ணத்தை வென்றது ரியால் மட்ரிட்.

லா லீகா பட்டியலில் 40 புள்ளிகளுடன் கோல் வித்தியாச அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது ரியால்.