ஆக மோசமாகத் தோற்று அவமானப்பட்ட இந்தியா

மும்பை: அரங்கம் நிறைந்த ரசிகர்களின் பேராதரவுடன் இந்திய அணி விளையாடியபோதும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மறக்கவேண்டிய நிகழ்வாக அமைந்துவிட்டது.

மும்பை வான்கடே அரங்கில் நேற்று முன்தினம் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

அணித்தலைவர் ஆரோன் ஃபின்ச் 110 ஓட்டங்களையும் டேவிட் வார்னர் 128 ஓட்டங்களையும் விளாசி இறுதி வரை களத்தில் நிற்க, 74 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பந்தடித்த இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா 13 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஷிகர் தவானும் (74) லோகேஷ் ராகுலும் (47) இணைந்து 121 ஓட்டங்களைச் சேர்த்தனர்.

பின்வந்தவர்கள் அந்த நல்ல அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால் இந்திய அணி 49.1 ஓவரில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.

முகம்மது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா என உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி கொண்டிருந்ததால் ஆஸ்திரேலிய அணியும் ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்தது.

தொடக்கத்தில் ஃபின்ச் அதிரடியாக ஆட, அமைதிகாட்டினார் வார்னர். ஆயினும், அரைசதம் கடந்ததும் வார்னர் அதிரடி பாணிக்கு மாறினார். எதிரணி வீரர் ஒருவரையேனும் ஆட்டமிழக்கச் செய்ய இந்தியப் பந்துவீச்சாளர்கள் பலவாறு முயன்றும் அவ்வெண்ணம் ஈடேறவில்லை.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி, “பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என மூன்று துறை களிலும் ஆஸ்திரேலிய அணி எங்களை வெற்றிகொண்டுவிட்டது,” என்றார்.

இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் நாளை நடக்கவிருக்கிறது.