இந்திய வீரர்கள் மூவருக்கு ஐசிசி விருது

துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில்,  நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றபோதும் இங்கிலாந்து மகுடம் சூடக் காரணமாக இருந்து, ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார் ஸ்டோக்ஸ். அத்துடன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஜேக் லீச்சுடன் இணைந்து, கடைசி விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களைச் சேர்த்து, ஆச்சரிய வெற்றியைப் பெற்றுத் தந்தார் அவர். அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்களை விளாசினார்.

“கடந்த 12 மாதங்கள் என் கிரிக்கெட் வாழ்க்கையின் மகத்தான காலகட்டம்,” என்றார் 28 வயதான ஸ்டோக்ஸ்.

திடலில் விளையாட்டு உணர்வுடன் நடந்துகொண்டமைக்காக இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விருது வழங்கப்படுகிறது. தடைக்காலம் முடிந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை உலகக் கிண்ணப் போட்டியின்போது ரசிகர்கள் கேலி செய்ய, அவர்களை நோக்கி ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் ஐசிசி நடுவர்கள் மனதைக் கவர்ந்ததால் இந்த விருதுக்கு கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 போட்டிகளில் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கைப்பற்றினார். பங்ளாதேஷுக்கு எதிரான போட்டியில் சாஹர் ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்தார். கடந்த ஆண்டிற்கான  ஐசிசி விருது வென்ற மூன்றாவது இந்தியரான ரோகித் சர்மா, சிறந்த ஒருநாள் போட்டி ஆட்டக்காரராகத் தேர்வுபெற்றார். 

சிறந்த டெஸ்ட் போட்டி ஆட்டக்காரராக பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), வளர்ந்து வரும் வீரர்களில் சிறந்தவராக மார்னஸ் லபுஷேன் (ஆஸ்திரேலியா), சிறந்த நடுவராக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

டெஸ்ட், ஒருநாள் கனவு அணிகளின் தலைவராக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் மயங்க் அகர்வால், டெஸ்ட் கனவு அணியில் இடம்பிடித்த மற்றுமோர் இந்தியர். ஒருநாள் போட்டிக்கான அணியில் கோஹ்லியுடன் ரோகித் சர்மா, ஐஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் என மேலும் மூன்று இந்தியர்களுக்கு இடம் கிடைத்தது.

கனவு அணிகள்: 

டெஸ்ட் போட்டி: விராத் கோஹ்லி (அணித்தலைவர்), மயங்க் அகர்வால், டாம் லேதம், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பிராட்லி வாட்லிங், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நீல் வேக்னர், நேதன் லயன்.

ஒருநாள் போட்டி: கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ரோஸ் ரெய்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தஃபிசுர் ரஹ்மான், ரஷீத் கான், குல்தீப் யாதவ், பும்ரா.