பரம எதிரியை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல்

லிவர்பூல்: தனது பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட் குழுவை வென்று தனக்கும் அக்குழுவுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை 30ஆக உயர்த்தும் முனைப்புடன் காத்திருக்கிறது தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் லிவர்பூல் காற்பந்துக் குழு.

இந்த இரு குழுக்களும் சிங்கப்பூர் நேரப்படி நாளை பின்னிரவு 12.30 மணிக்கு லிவர்பூல் குழுவின் சொந்தத் திடலான ஆன்ஃபீல்டில் சந்திக்கின்றன. 

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படும் லிவர்பூல் குழு தற்போது நடப்பு வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழுவைக் காட்டிலும் 14 புள்ளி வித்தியாசத்தில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சிட்டியைக் காட்டிலும் யுனைடெட் 13 புள்ளிகள் பின்தங்கியுள்ளது. அது கடந்த ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை. இந்த ஆண்டிலும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதற்காக யுனைடெட் கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒலே குனார் சோல்ஷியாரின் யுனைடெட் குழுவே இப்பருவத்தில் லிவர்பூலின் வேகத்தைச் சற்று நிறுத்தியது என்று சொல்லலாம்.

கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்த இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அந்த ஓர் ஆட்டத்தில்தான் லிவர்பூல் ஒரு புள்ளியை மட்டுமே எடுத்தது.

ஐரோப்பாவின் ஆகச் சிறந்த ஐந்து காற்பந்து லீக் போட்டிகளைப் பொறுத்தவரை லிவர்பூல் சாதனையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அது இந்தப் பருவத்தில் பங்கேற்ற 21 ஆட்டங்களில் 20ல் வெற்றி பெற்றுள்ளது.

“எங்கள் குழுவின் எண்ணத்தில் வெற்றி மட்டுமே பதிந்துள்ளது. நாங்கள் ஒவ்வோர் ஆட்டமாகக் கவனம் செலுத்தி வருகிறாம்,” என்றார் லிவர்பூல் குழுவின் முதல்நிலை கோல்காப்பாளர் அலிசன் பெக்கர். கடந்த பத்து ஆட்டங்களில் ஒரேயொரு முறை மட்டுமே பந்து தன்னைக் கடந்து வலைக்குள் செல்ல அனுமதித்தார் அவர்.

அவருக்குக் கடும் போட்டியைக் கொடுக்கக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்ட யுனைடெட் குழுவின் மார்கஸ் ரேஷ்ஃபர்ட், லிவர்பூல் உடனான ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

கடந்த புதன்கிழமை உல்வ்ஸ் குழுவிற்கெதிரான எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில், ஏற்கெனவே காயம்பட்டிருந்த ரேஷ்ஃபர்ட்டை நிர்வாகி சோல்ஷியார் விளையாட வைத்தார். ஆனால், 15 நிமிடங்கள் மட்டுமே அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது.

இருப்பினும் பலம் வாய்ந்த லிவர்பூல் குழுவை எதிர்கொள்ள உத்திகளை வகுத்திருப்பதாக யுனைடெட் நிர்வாகி சோல்ஷியார் கூறினாலும், தொடர்ந்து வெற்றியைச் சுவைத்து வரும் லிவர்பூல் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப் அவற்றைச் சமாளிக்க மாற்று உத்திகளை வகுத்திருப்பார் என்று உறுதியாகக் கூறலாம்.