இபிஎல்:சொந்த கோலால் மான்செஸ்டர் சிட்டி சமநிலை

மான்செஸ்டர்: கிறிஸ்டல் பேலஸ் காற்பந்துக் குழுவிடம் 2-2 என சமநிலை கண்டதால், மான்செஸ்டர் சிட்டி குழுவின் இபிஎல் பட்டம் வெல்லும் கனவு மங்கியது.

எத்திஹாட் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் விழுந்த கடைசி நிமிட சொந்த கோலால் வெற்றியைப் பறிகொடுத்தது சிட்டி.

39வது நிமிடத்தில் விழுந்த முதல் கோல் கிறிஸ்டல் பேலசுடைய தானது. முற்பாதி நேரத்தில் டோசன் போட்ட அந்த ஒரே கோல் பேலசிற்கு நம்பிக்கை அளித்தது.

அதற்கு முன்னதாக சிட்டிக்கு கிடைத்த ப்ரீ-கிக் வாய்ப்பின்போது கெவின் டி பிரய்ன உதைத்த பந்து  கோல் கம்பத்தை உரசிச் சென்று ஏமாற்றமளித்தது.

ஆனால் கடைசி எட்டு நிமிட நேரத்தில் செர்ஜியோ அகுவேரோ அடுத்தடுத்து போட்ட இரட்டை கோல் ஆட்டத்தில் விறுவிறுப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையே, 71வது நிமிடத்தில் சிட்டிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெனால்டி வாய்ப்பும் காணொளி உதவி நடுவர் முறைக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டது.

இரட்டை கோல் விழுந்ததைத்தொடர்ந்து, வெற்றி பெற்றுவிடலாம் என்ற சிட்டியின் நம்பிக்கையில், பேரிடியாக விழுந்தது சொந்த கோல்.

பேலசின் வில்ஃபர்ட் ஸாகா, தனது சக வீரரான கோனோர் விக்ஹாம்மிடம் அனுப்பிய பந்தை எதிர்கொண்ட சிட்டியின் ஃபெர்னான்டினோ சொந்த வலைக்குள் அனுப்பியதால் ஆட்டம் சமநிலை கண்டது. இதனால் சிட்டியின் இபிஎல் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பும் மங்கியது.

கடந்த பருவத்தில் இதே எத்திஹாட் அரங்கில் பேலஸ் சிட்டியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பட்டியலில் முதலில் இருக்கும் லிவர்பூலைவிட 13 புள்ளிகள் குறைவாகவுள்ளது சிட்டி.

நேற்று நடைபெறவிருந்த மேன்யூவிற்கு எதிரான ஆட்டம் உட்பட லிவர்பூல், சிட்டியைவிட இரண்டு ஆட்டங்கள் குறைவாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, “நாங்கள் ஆட்டத்தை வெல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தோம். ஆனாலும் கடைசி நிமிடத்தில் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போனது.

“இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் தொடர்ந்து நன்றாக விளையாட முயல வேண்டும்.இனி அடுத்த பருவ சாம்பி யன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெறுவதில் கவனம் செலுத்துவோம்,” என்றார்.

இன்னோர் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று செல்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது நியூகாசல் யுனைடெட்.

நியூகாசலின் அந்த ஒரே வெற்றி கோலும் காயம்பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது விழுந்தது. 

இதனால் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்து விடலாம் என்ற செல்சியின் நோக்கத்திற்குச் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மற்றோர் ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை 1-0 என வீழ்த்திய நார்விச், ‘ரெலிகேஷன்’ நிலையிலிருந்து சற்று முன்னேறியது.