ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் கோஹ்லி 89 ஓட்டங்களை விளாசினார்.
இதன்மூலம் அணித் தலைவராக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ்.டோனியிடமிருந்து இவர் தட்டிப்பறித்தார்.
அணித் தலைவராக கோஹ்லி இதுவரை 199 இன்னிங்சில் 11,208 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மாறாக, டோனி 330 இன்னிங்சில் 11,207 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
மற்றொரு சாதனையாக, இந்த ஆட்டத்தில் கோஹ்லி 14 ஓட்டங்கள் எடுத்தபோது அணித் தலைவராக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கோஹ்லி 82 ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார். இந்தச் சாதனை பட்டியலில் டோனி (127 ஆட்டங்கள்) இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (131 ஆட்டங்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடித்த தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு கோஹ்லி பாராட்டு மழையைப் பொழிந்துள்ளார். தாம் களம் காண்பதற்கு முன்பே ரோகித் ஆட்டத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டதைச் சுட்டிய கோஹ்லி, ரோகித்தின் ஆட்டம் அருமையாக அமைந்ததாக குறிப்பிட்டார்.
ரோகித்தும் தாமும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று கூறிய அவர், நிலைத்து நின்று ஆடி சிறந்த பங்காளித்துவத்தை அமைப்பது முக்கியம் என்று தாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வதைச் சுட்டினார்.
இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கோஹ்லி கூறினார்.

