பணிந்தது பார்சிலோனா

வெலன்சியா: புதிய நிர்வாகி கீக்கே செட்டியனின்கீழ் பார்சிலோனா காற்பந்துக் குழு முதன்முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளது.

வெலன்சியா குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த  ஸ்பானிய லா லீகா ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்றுப்போனது.

தொடக்கத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோட்டைவிட்டபோதும் ஆட்டத்தின் 48வது, 77வது நிமிடங்களில் விழுந்த இரு கோல்களை அடித்து ஆறுதல் தேடிக்கொண்டார் வெலன்சியாவின் உருகுவே ஆட்டக்காரர் மேக்சி கோமெஸ்.

 2007ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சொந்த அரங்கில் வைத்து, பார்சிலோனாவை லீக் ஆட்டமொன்றில் வெலன்சியா வீழ்த்தியிருப்பது இதுவே முதன்முறை.

இதையடுத்து, ஸ்பானிய லா லீகா புள்ளிப் பட்டியலில் முதல்நிலையை அக்குழு பறிகொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ரியால் மட்ரிட்-வயாடோலிட் குழுக்கள் மோதவிருந்த நிலையில் அதில் ரியால் வெற்றி கண்டிருந்தாலும் அல்லது ஆட்டம் சமநிலையில் முடிந்திருந்தாலும் முதல்நிலை ரியால் வசம் சென்றிருக்கும்.