மேன்யூவின் கோல் மழையில் மூழ்கிய ட்ரான்மிர் ரோவர்ஸ்

2 mins read
de849515-ec44-4952-95ef-04c4236427d9
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து முதன்முறையாக மான்செஸ்டர் யுனைடெட் ஓர் ஆட்டத்தில் ஆறு கோல்கள் போட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் நான்காவது சுற்று ஆட்டமொன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டின் கோல் மழையில் மூழ்கியது ட்ரான்மிர் ரோவர்ஸ்.

எதிரணி மண்ணில் நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தின் முதல் 45 நிமிடத்திலேயே ஐந்து கோல்களைப் போட்டுத் தள்ளியது மான்செஸ்டர் யுனைடெட்.

இப்பருவத்தின் தொடக்கத்தில் மேன்யூ குழுவில் இணைந்த ஹேரி மெக்வாயர், டியோேகா டலோட் இருவரும் தங்களது முதல் கோலைப் பதிவு செய்தனர்.

கடந்த 2014, மார்ச் மாதத்திற்குப் பிறகு ஃபில் ஜோன்ஸ் நேற்று முதல்முறையாக கோல் போட்டார்.

இவர்கள் தவிர ஜெஸ்ஸி லிங்கார்ட் மற்றும் ஆண்டனி மார்சியல் இருவரும் தலா ஒரு கோல் போட முற்பாதி ஆட்ட நேரத்தில் மேன்யூவின் கோல் எண்ணிக்கை ஐந்தானது.

இதைத்தொடர்ந்து பிற்பாதி ஆட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் மேசன் கிரீன்வுட் கோலாக்கினார். இதனால் 6-0 என ட்ரான்மிர் ரோவர்ஸ் குழுவை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்.

சர் அலெக்ஸ் ஃபெர்குசன் நிர்வாகியாக இருந்தபோது, கடந்த 2011ல் ஆறு கோல்கள் போட்ட மேன்யூ, கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து நேற்றைய ஆட்டத்தில் ஆறு கோல்கள் போட்டது.

இந்த வெற்றி மேன்யூவின் தற்போதைய நிர்வாகி சோல்சியார் மீதான நெருக்கடியை சற்று குறைத்திருந்தாலும், ஆட்டத்தின்போது மேன்யூ ரசிகர்கள் தங்களது குழு உரிமையாளருக்கு எதிராக கோஷமிட்டனர்.

பிரிமியர் லீக் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மேன்யூவைப் பலப்படுத்த பல புதிய விளையாட்டாளர்கள் தேவை என்று கருதப்படும் நிலையில், இதில் குறை வைத்திருப்பதாக எரிச்சலடைந்த ரசிகர்கள் உரிமையாளர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ரசிகர்களின் கோஷங்கள் பற்றி பேசிய மேன்யூ நிர்வாகி சோல்சியார், "குழு நல்ல முடிவுகளைப் பெற நாங்கள் தொடர்ந்து பாடு படுவோம்.

"போட்டியில் வெற்றி பெறும்போது எப்போதுமே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். குழுவின் முன்னேற்றத்திற்கு தேவையானதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்," என்றார்.

இன்னோர் ஆட்டத்தில் இளம் ஆட்டக்காரர்களைக் கொண்டு களமிறங்கிய இபிஎல் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் குழுவை 2-2 என சமநிலை கண்டது லீக் ஒன் குழுவான ஷ்ரூஸ்பரி. இரண்டு கோல்கள் முன்னிலையில் இருந்த லிவர்பூல், கடைசி 20 நிமிடத்தில் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்ததால், நான்காவது சுற்று ஆட்டத்தை மீண்டும் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஷ்ரூஸ்பரியின் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய கம்மின்ஸ் இரண்டு கோல்கள் போட்டு லிவர்பூலின் வெற்றியைத் தடுத்துவிட்டார்.