போர்ன்மத்தை வீழ்த்தி ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறிய ஆர்சனல்

1 mins read
611436f7-6985-4f39-b02b-8c35d45e84ea
எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரின் நான்காவது சுற்று ஆட்டமொன்றின்போது போர்ன்மத்தின் நேதன் அகேவும் (இடது) ஆர்சனலின் நிகிதியாவும் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். படம்: ஏஎஃப்பி -

லண்டன்: ஒரு கோல் வித்தியாசத்தில் போர்ன்மத் காற்பந்துக் குழுவை வீழ்த்தி எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரின் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஆர்சனல்.

ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் ஆர்டெட்டா தன் குழுவின் இளம் ஆட்டக்காரர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றிவிட்டனர்.

5வது நிமிடத்தில் சாகாவும் நிகிதியாவும் 26வது நிமிடத்தில் போட்ட கோல்கள் ஆர்சனலை அடுத்த சுற்றுக்கு கொண்டு சென்றன.

ஆட்ட நேரம் முழுவதும் போர்ன்மத் கோல் எதுவும் போடாத நிலையில், மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய சாம் சர்ரிட்ஜ் காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின் போது ஒரு கோல் போட்டு ஆறுதல் அளித்தார்.

இதனையடுத்து, 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது ஆர்சனல்.

"நாங்கள் இளம் வீரர்களுடன் விளையாடினோம். எனவே இந்த ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரியும்.

"அவர்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நன்றாக முன்னேறி வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வேட்கையுடன் விளையாடினர்.

"நாங்கள் திட்டமிட்டதை வீரர்கள் சரியாக செயல்படுத்தினார்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவர்கள் தைரியத்துடன் செயல்பட்டார்கள்.

"ஆட்டத்தின் முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் எனக்குப் பிடித்த நிறைய விஷயங்களை நான் இன்றைய ஆட்டத்தில் பார்த்தேன்," என்றார் ஆர்டெட்டா.