மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
மெல்பர்ன் நகரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்டியும் ஏழாவது இடத்தில் உள்ள செக் குடியரசின் கிவிட் டோவாவும் மோதினார்கள்.
இதில் ஆஸ்லே பார்டி 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய பொது விருது அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் சோபியா கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் துனீசியாவின் ஜாபெரை வென்றார். இவர் முதல்முறையாக கிராண்ட்சிலாம் போட்டி ஒன்றின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் 6-3 2-6 2-6 7-6(8) 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சாண்ட்ரெனை வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ஃபெடரர் 15வது முறையாக முன்னேறியுள்ளார்.

