ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களில் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அடுத்து வந்த மூன்று போட்டிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டிற்குப் பிறகு இங்கிலாந்து அந்நிய மண்ணில் கைப்பற்றியுள்ள இரண்டாவது டெஸ்ட் தொடர் இது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் கடந்த 24ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில், பூவா தலையா வென்ற இங்கிலாந்து, முதலில் பந்தடித்தது.
அந்த அணி முதல் இன்னிங்சிற்கு 400 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்சில் 248 ஓட்டங்களும் எடுத்தது.
தென்னாபிரிக்க அணியோ, முதல் இன்னிங்சில் 183 ஓட்டங்கள் எடுத்த நிலையில், 466 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 274 ஓட்டங்களுக்கே சுருண்டு தோல்வியைத் தழுவியது தென்னாப்பிரிக்கா.
இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது தென்னாப்பிரிக்க அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்தது.
ஸ்டுவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மார்க் வுட்டும், தொடர் நாயகனாக பென் ஸ்டோக்சும் தேர்வு செய்யப்பட்டனர்.
"முதல் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு மூன்று போட்டிகளையும் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய இந்த இளம் குழுவைப் பற்றி பெருமைப்பட இதை விட சிறந்த தருணம் இல்லை.
"இனிவரும் நாட்களில் எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
"வெற்றிகளைக் குவிக்க காத்திருக்கும் இந்த அணிக்கு வானமே எல்லை," என்றார் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்.
அபராதத்துடன் ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்க வீரர்
இப்போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் 34 வயது வெர்னன் ஃபிலாண்டர் அனைத்துலக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவரது இந்த கடைசி ஆட்டத்தில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக அபராதம் விதித்தது ஐசிசி.
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்க செய்த பிறகு பிளாண்டர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதால், அவருக்கு 15% அபராதம் விதிக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டு தனது 19வது வயதில் முதல்தரப் போட்டியில் அறிமுகமானார் வெர்னன் ஃபிலாண்டர்.

