கடைசி நிமிட கோலில் வீழ்ந்த லெஸ்டர் சிட்டி

கடைசி நிமிட கோலில் வீழ்ந்த லெஸ்டர் சிட்டி

2 mins read
403194fb-ad28-41af-9ff6-8ccf27739dbe
எதிரணி வீரர் அனுப்பிய பந்தை வில்லாவின் டிரெசகே லாவகமாக கோலாக்கினார். படம்: ஏஎஃப்பி -

லண்டன்: காரபாவ் கிண்ணக் காற்பந்து போட்டியின் அரையிறுதியில் நேற்று ஆஸ்டன் வில்லாவுடன் மோதிய லெஸ்டர் சிட்டி, இறுதி நிமிட கோலில் வீழ்ந்தது. ஆட்டம் முடியும் தறுவாயில் காயங்களுக்காகவும் இடைநிறுத்தங்களுக்காகவும் கூடுதலாக 4 நிமிடங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதில் கூடுதல் நேரத்தின் 3வது நிமிடத்தில் ஆஸ்டன் வில்லாவின் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய அகமது எல்மோகாடி பந்தை வில்லாவின் டிரெசகே பக்கம் உதைக்க அவருக்கு நன்றி சொல்லாத குறையாக டிரெசகேயும் எதிரணியின் கோல் வலை ஓரத்துக்குப் பந்தைத் தட்டி கோலாக்கினார்.

அதுவரை 1-1 என சமநிலையில் இருந்த ஆட்டம் ஆஸ்டன் வில்லா கோல் போடவும் 2-1 என வில்லாவுக்குச் சாதகமாக முடிந்தது.

இதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் எஃப்ஏ கிண்ணப் போட்டிக்குப் பிறகு முதல் முறையாக இறுதிப் போட்டி ஒன்றுக்கு தகுதி பெற்றுள்ள தங்கள் குழுவை பாராட்டி மகிழ்ச்சிக் குதூகலத்தில் மூழ்கினர் வில்லா ரசிகர்கள்.

நேற்றைய போட்டியில் ஆஸ்டன் வில்லாவை அதன் கோல்காப்பாளர் ஒர்ஜான் நைலேண்ட் என்பவர் காப்பாற்றியதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

அவருடைய அபார விளையாட்டால் முதல் பாதி ஆட்டத்தில் துள்ளி விளையாடிய ஆஸ்டன் வில்லா குழு ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு லெஸ்டரை திக்குமுக்காட வைத்தது.

பின்னர், ஆட்டத்தின் 72ஆம் நிமிடத்தில் ஹார்வி பார்ன்ஸ் என்பவர் கொடுத்த பந்தை கோலாக்கிய இகியனாச்சோ மூலம் ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது லெஸ்டர் சிட்டி.

ஆனால், ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் டிரெசகே போட்டா கோலால் பிரண்டன் ரோஜர்ஸ் நிர்வாகியாக இருக்கும் லெஸ்டர் குழு மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆஸ்டன் வில்லா கோல்காப்பாளர் நைலேண்ட் தனியொரு ஆளாக லெஸ்டரின் அத்தனை கோல் முயற்சிகளையும் தடுத்ததாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

அதன்மூலம் ஆஸ்டன் வில்லா ஆட்டத்தின் முதல் பாதியில் டார்கெட் என்பவர் 12ஆம் நிமிடத்தில் போட்ட கோலினால் தங்கள் முன்னணி நிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்ததுடன் வில்லாவின் மத்திய திடல் ஆட்டக்காரர் கிரீலிஷ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வில்லா குழுவுக்கு அமைதியாக விளையாட உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கிரீலிஷ் அனுப்பிய பந்தை கோல் வலைக்கு முன்னால் இருந்த சமாட்டா என்ற வீரர் கோலாக்க தவறினார். நல்ல வேளையாக அவர் மாற்றப்பட்டு டிரெசகே கோல் போட்டு வில்லாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.