பட்டையைக் கிளப்பிய ரோகித்; தொடரை கைப்பற்றியது இந்தியா

பட்டையைக் கிளப்பிய ரோகித்; தொடரை கைப்பற்றியது இந்தியா

2 mins read

ஹேமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'சூப்பர் ஓவர்' முறையில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

ஹேமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் நியூசிலாந்து அணி பூவா, தலையா வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 40 பந்துகளில் 65 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி 27 பந்துகளில் 38 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதையடுத்து 180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் திணறியது.

இருப்பினும் அணித் தலைவர் வில்லியம்சன் 48 பந்துகளில் 95 ஓட்டங்களை அதிரடியாக குவிக்க சரிவிலிருந்து மீண்டது நியூசிலாந்து.

முடிவில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை நியூசிலாந்து எடுத்ததால் ஆட்டம் 'டை'யில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 17 ஓட்டங்கள் எடுத்தது.இதையடுத்து இந்தியா விளையாடியது.

ரோகித்தும் கேஎல் ராகுலும் டிம் சௌத்தி ஓவரின் முதல் பாதியில் திணறினார்கள்.

கடைசி 2 பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 2 சிக்சர்களைப் பறக்கவிட்டு அணிக்கு ரோகித் சர்மா வெற்றி தேடித் தந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

ஆட்ட நாயகன் விருது இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.