அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

1 mins read

போட்செப்ஸ்ட்ரூம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்திய இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது.

பூவா தலையா வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சக்சேனா, திலக் வர்மா அணித் தலைவர் பிரியம் கார்க் உள்ளிட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா 54 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

இதற்கிடையே, சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 62 ஓட்டங்கள் சேர்த்தார். இவரைத் தவிர அங்கோலேகர் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து 234 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசி திணறடித்தனர்.

இதனால் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா.

அதேசமயம் துவக்க வீரர் சாம் ஃபன்னிங், பதற்றமின்றி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆனால் 42வது ஓவரில் 3 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 43.3 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இந்திய அணி 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா தரப்பில் கார்த்திக் தியாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.