அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நியூசிலாந்து அணி

அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நியூசிலாந்து அணி

1 mins read

டர்பன்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிகெக்ட் போட்டியின் அரையிறுதிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. 13வது ஜூனியர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்தித்த நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்தனர்.

பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 238 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 99 ஓட்டங்கள் (104 பந்துகள், 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 4 விக்கெட்டுகளையும் ஜோய் பீல்டு, ஜெஸ்சி தாஷ்கோப் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

தோல்வியைத் தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோய் பீல்டு (38 ஓட்டங்கள்), கிறிஸ்டியன் கிளார்க் (46 ஓட்டங்கள்) ஜோடி ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.