மான்செஸ்டர்: காரபாவ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி தகுதி பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதிச் சுற்று இரண்டாவது ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டுடன் அது மோதியது.
ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் சிட்டி வெற்றி பெற்றது.
இரண்டு கோல்கள் முன்னிலையுடன் களமிறங்கிய சிட்டிக்கு ஆட்டம் தொடங்கியதிலிருந்து கோல் போட பல பொன்னான வாய்ப்புகள் கிடைத்ததன.
ஆனால் யுனைடெட் கோல்காப்பாளர் டாவிட் ட கியாவின் சாகசங்கள், தற்காப்பு ஆட்டக்காரர்களின் பிடிவாதம் ஆகியவை சிட்டி கோல் போடாதபடி பார்த்துக்கொண்டன.
இந்நிலையில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கோல் போட்டது.
மெட்டிச் அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் சென்று கோல் கம்பம் மீது பட்டு வலைக்குள் புகுந்தது.
ஆனால் இந்தப் பின்னடைவைக் கண்டு சிட்டியின் ஆட்டக்காரர்கள் கலங்கவில்லை.
மாறாக, தங்கள் நிலையை வலுப்படுத்த கோல்களைத் தேடி தாக்குதல் நடத்தினர்.
மறுமுனையில், ஆட்டத்தைச் சமன்செய்யும் முனைப்பில் யுனைடெட் தன்னால் ஆன அனைத்தையும் செய்தது.
ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் சிட்டியின் ரஹீம் ஸ்டெர்லிங் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
ஆனால் அவர் ஆஃப்சைட் நிலையில் இருந்ததாகக் கூறி அந்த கோலை நிராகரித்தார் நடுவர்.
பிற்பாதி ஆட்டம் தொடங்கி 13 நிமிடங்களில் ஸ்டெர்லிங்கிற்கு மீண்டும் கோல் போட வாய்ப்பு கிட்டியது.
யுனைடெட்டின் தற்காப்பில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, பந்து ஸ்டெர்லிங்கிடம் சென்றது. ஆனால் அதை அவர் வலைக்குள் சேர்க்கத் தவறினார்.
ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது செர்ஜியோ அகுவேரோ அனுப்பிய பந்து வலைலைத் தீண்டியது. ஆனால் இம்முறையும் ஆஃப்சைட் காரணமாக கோல் மறுக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்தில் 1-0 எனத் தோற்றும் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 3-2 என சிட்டி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் அது ஆஸ்டன் வில்லாவைச் சந்திக்கிறது.

