லண்டன்: இவ்வார இறுதிக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் விறுவிறுப்பான மோதலுடன் தொடங்கவுள்ளன.
பட்டியலின் மூன்றாமிடத்தில் உள்ள லெஸ்டர் சிட்டியை, அதனுடைய கிங் பவர் விளையாட்டரங்கத்திலேயே எதிர்கொள்ளவிருக்கிறது நான்காமிடத்தில் இருக்கும் செல்சி குழு.
பிரெண்டன் ரோஜர்ஸ் பயிற்சியின்கீழ் இந்தப் பருவத்தைச் சிறப்பாகத் தொடங்கியது லெஸ்டர். ஆயினும், கடந்த சில ஆட்டங்களாக அக்குழு தடுமாறி வருகிறது. அதிலும், இவ்வார மத்தியில் லீக் கிண்ண அரையிறுதியில் ஆஸ்டன் வில்லாவிடம் அக்குழு தோற்றது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
செல்சியும் அதே போன்றதொரு நிலையில்தான் இருக்கிறது. கடைசியாக அக்குழு பங்கேற்ற லீக் ஆட்டத்தில் ஆர்சனலுடன் 2-2 எனச் சமநிலை கண்டது. சொந்த அரங்கில் நடந்த அந்த ஆட்டத்தில் செல்சி இருமுறை முன்னிலைக்குச் சென்றபோதும் வெற்றியைப் பறிகொடுத்தது.
இத்தகைய நிலையில், இன்றைய ஆட்டத்தில் வென்று பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் தங்களது நிலையை உறுதிப்படுத்த இவ்விரு குழுக்களும் முனைப்புடன் விளையாடும்.
முன்னணி ஆட்டக்காரர்களிடம் இருந்து அவர்களின் சிறப்பான ஆட்டத்திறனை வெளிக்கொணரும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார் லெஸ்டர் நிர்வாகி ரோஜர்ஸ். ஆயினும், அக்குழுவின் செயல்பாட்டில் நிலைத்தன்மையின்மை எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஆகையால், இன்றைய ஆட்டத்தில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப அக்குழு ஆர்வமாக உள்ளது.
செல்சியை பொறுத்தமட்டில், கோல் கட்டத்தினுள் செயல்பாட்டை மேம்படுத்தி, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறனை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நிர்வாகி லாம்பார்ட் விரும்புகிறார்.
இந்தப் பருவத்தில் எதிரணி அரங்கில் விளையாடிய ஆட்டங்களில் செல்சியின் செயல்பாடு சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஸ்பர்ஸ், ஆர்சனல் குழுக்களை அக்குழு வீழ்த்தியிருப்பதால் செல்சி வீரர்கள் மத்தியில் நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. லிவர்பூல்-சௌத்ஹேம்டன் குழுக்கள் மோதும் ஆட்டம் இரவு 11 மணிக்கும் மான்செஸ்டர் யுனைடெட்-உல்வ்ஸ் குழுக்கள் மோதும் ஆட்டம் இரவு 1.30 மணிக்கும் தொடங்கும்.

