புதுடெல்லி: சிறப்புமிக்க 'உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை (வோர்ல்டு கேம்ஸ் அத்லெட் ஆஃப் தி இயர்)' விருதை வென்ற முதல் ஹாக்கி ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய மகளிர் ஹாக்கி அணித் தலைவி ராணி ராம்பால்.
சிறந்த விளையாட்டாளரைத் தேர்வுசெய்யும் பொறுப்பை ரசிகர்களிடமே விட்டுவிட்டது 'தி வோர்ல்டு கேம்ஸ்' அமைப்பு. இணையம் வழியாக 20 நாட்கள் நடந்த வாக்கெடுப்பில் ராணிக்கு 199,477 வாக்குகள் கிடைத்தன.
கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்துலக ஹாக்கி கூட்ட மைப்புத் தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களில் இந்திய அணி வென்றது. அத்தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதைக் கைப்பற்றினார் ராணி. இவரது தலைமையிலான இந்திய அணி, இந்திய ஹாக்கி வரலாற்றில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றது.
"ஒட்டுமொத்த ஹாக்கி வட்டாரத்திற்கும் எனது அணிக்கும் தாய்நாட்டிற்கும் விருதை அர்ப்பணிக்கிறேன்," என்ற ராணிக்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது அறி விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பதினைந்து வயதிலேயே தேசிய அணிக்குள் நுழைந்து விட்ட ராணி, இதுவரை 240க்கு மேற்பட்ட முறை இந்திய அணி சார்பில் களமிறங்கியுள்ளார்.
கௌரவமிக்க இந்த விருதுக்கு ராணியின் பெயரைப் பரிந்துரைத்த அனைத்துலக ஹாக்கி கூட்டமைப்பு, டுவிட்டர் மூலமாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது. 'ஹாக்கி இந்தியா' தலைவர் முகம்மது முஸ்டாக் அகமதுவும் ராணிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
25 விளையாட்டுகளில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 25 பேர் இவ்விருதுக்கான போட்டியில் இருந்தனர்.

